வெள்ளி, 22 ஜூன், 2007

முதுமையை புரிந்துக் கொள்வோம்


வைதேகி தேசிகன்

ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர் பட்டியல் பெருகிக் கொண்டே வருகிறது. இப் பட்டியலில், 'முதியோர்' முக்கிய இடங்களைப் பெறுகின்றனர்.
தானாய் வந்த இந்த வாழ்க்கையைத் தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் வாழ்ந்து, அந்திமக் காலத்தில் பெரும் எதிர்பார்ப்புகளும், எதிர்பாராத தோல்விகளுமாக நாள்களைக் கழிக்கிறார்கள்.

இந்தியாவில் கூட்டுக் குடும்ப அமைப்பு நொறுங்க, நொறுங்க முதியோர்களின் சோகம் அதிகரித்து வருகிறது.

மேலை நாடுகளில் இளமைக் காலத்திலேயே தமது முதுமைப் பருவத்தைத் திட்டமிடும் போக்கும், முதுமையில் யார் தயவையும் எதிர்பாராமல் தாமே முதியோர் இல்லங்களில் கட்டணம் செலுத்தி அடைக்கலம் தேடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

மிகவும் உணர்வுப் பூர்வமான இந்தியாவில், இரண்டு தலைமுறைகள் மோதிக் கொண்டேயிருக்கின்றன.

ஏன் இப்படி ஒரு நிலை. இதற்குக் காரணம் இன்றைய நடுத்தர வயதினர் மட்டுமல்ல முதியோர்களும்தான். இப்படிப்பட்ட பிரச்சினைகள் நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில் மட்டும்தான். மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் எல்லோருமே சம்பாதிக்க வேண்டிய நிலை. மிகவும் முடியாத வயதானவர்கள் தவிர எல்லோருமே உழைக்க வேண்டும். ஓயாமல் வேலை செய்து களைத்துப் போனவர்கள் ஒரு பிடி சோறு கிடைத்தவுடன் தூங்கப் போய் விடுவார்களே? பின்பு ஏது பிரச்சினை? அதே போல வசதி மிகுந்த குடும்பங்களில் அவரவர் வேலை அவரவர்களுக்கு. அதனால் வீண் பிரச்சினைக்கே இடமில்லை.

வயது ஏற ஏற தன்னைத்தானே உணர்ந்து கொள்ளத் தெரிய வேண்டும். தன் நிலை புரிய வேண்டும். கையில் ஏதாவது பணமிருந்தால் அது தான் இருக்கும் வரை வேண்டுமே என்ற எண்ணத்துடன் பத்திரப்படுத்திக் கொள்ளத் தெரிய வேண்டும்.

தன் பிள்ளைகள் தங்களை மதிக்க வேண்டும், தங்களின் வார்த்தைகளைக் கேட்டு நடக்க வேண்டும் என்று எண்ணும் பெரியவர்கள், தங்களின் பிள்ளைகளை முழுமையாகப் புரிந்து கொண்டோமா என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து அதற்கு தன்னால் எப்படி தீர்வு காண முடியும் என்பதையும் ஆலோசிக்க வேண்டும். அதே போல இனி நாளை முதுமை என்னும் 'அந்தி' நேரத்தில் காலடி எடுத்து வைக்கப்போகும் இன்றைய நடுத்தர வயதினர் முதியவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முயல்வதுடன் - குடும்ப விஷயங்களை மனம் விட்டுத் தன் பெற்றோரிடம் பேச வேண்டும். அவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். அதைச் செயல்படுத்த வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனாலும், தன் பிள்ளைகள் தங்களின் கருத்துகளைக் கேட்கிறார்களே என்ற ஒரு நிறைவு அவர்களுக்குத் தரும் வழி இது. பிரச்சினை இல்லாத வீடு எது? நாம் நினைத்தால் எத்தனையோ பிரச்சினைகளிடையே நம்மைப் பெற்று வளர்த்தவர்களை அவர்கள் கடைசி காலத்தில் காப்பாற்றுவது நம் கடமையில்லையா?

சென்னை நீலாங்கரையில் உள்ள 'விச்ராந்தி' என்னும் வயது முதிர்ந்த பெண்களுக்கான முதியோர் இல்லத்தைத் துவங்கி நடத்தி வரும் திருமதி. சாவித்திரி வைத்தி அவர்களிடம் 'விச்ராந்தி' பற்றிக் கேட்டபோது....

'இன்று 'விச்ராந்தி' யில் 110 வயது முதிர்ந்த பெண்கள் உள்ளனர். இவர்களில் படுத்த படுக்கையாக எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ள பெண்களும் உண்டு. முன்பெல்லாம் ஆதரவற்றவர்களும், ஆண் வாரிசு இல்லாதவர்களும் மட்டும் தான் இதில் சேருவதற்காக வந்தனர். பின்னர் மகனை இழந்த அன்னையர்கள் சேர்ந்தனர். ஆனால் இன்றோ மகன் உயிருடன் இருக்கும் போதே ஒதுக்கப்பட்டு வந்து சேர்பவர்களும் உண்டு. வேறு வழியே இல்லை என்று விதியை நொந்து வருவோரை சேர்த்துக் கொள்ளாமல் என்ன செய்வது?

எல்லாப் பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படும். தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு ஆகிய தினங்களில் பாட்டிகளுக்குப் புதிய துணிமணிகள் தரப்படும். நவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஜனவரி முதல் தேதியும் பிரமாதமாகக் கொண்டாடப்படும்.

படுத்த படுக்கையில் உள்ளவர்களுக்குப் பணி செய்ய ஆட்கள் உள்ளனர். இங்குள்ளவர்கள் இறந்து போனால் அவர்களின் விருப்பப்படி ஈமச்சடங்குகளும் செய்யப்படும்'' என்றும் திருமதி. சாவித்ரி வைத்தி தெரிவித்தார். அவரே தன் கைகளினால் ஈமச்சடங்குகளையும் செய்கிறார் என அறிந்தபோது மனம் நெகிழ்ந்து போனது. முதுமையைப் புரிந்துகொண்டு, அதை வரவேற்க நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வோம்.

நன்றி : ஆறாம்திணை

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

kalakuda chellam.. kalakuda chellam..