வியாழன், 7 ஜூன், 2007

வாசிப்பது கிறுக்கன் - பணவீக்கம் ? எளிமையான விளக்கம் !

இது வணிக உலகதில் புதிதாக கால்லேடுத்துவைப்பவர்களுக்கு ....

எப்போதோ படித்தது உங்களுக்கு உதவும் என்ற நோக்கில் இங்கே வெட்டி ஒட்டியிருக்கேன்.

பணவீக்கம் என்றால் என்ன ?
ஏதாவது ஒன்று ஊதிப் பெருப்பதையோ, குண்டாவதையோ இன்ஃப்ளேஷன் என்று கூறுவோம். பொருளாதாரத்தில் இதற்கு இரண்டு பொருள் உண்டு. எல்லாப் பொருள்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை ஏறிவிடுவது... அல்லது பணத்தின் புழக்கம் அதிகரிப்பது. அதனால்தான், அதற்குப் பணவீக்கம் என்று பெயர். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், பணத்தின் புழக்கம் அதிகம் ஆகும் போது, அதன் மதிப்புக் குறைந்து போகிறது என்பதுதான். தேவைக்கு அதிகமாக ஒரு விஷயம் கிடைக்குமென்றால், அதன் மதிப்பு சரிந்துவிடுவது இயல்புதானே!

பணப்புழக்கம் அதிகமாக இருக்குமானால், மக்களின் கையில், பர்ஸ§களில், வங்கிக் கணக்குகளில் பணம் அதிகமாக இருக்குமானால், அவர்கள் செலவழிக்கத் தொடங்குவார்கள். மேன்மேலும் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அதனால், அவற்றின் விலைகள் உயரத் தொடங்கும். பொருள்கள் மற்றும் சேவைகளின் இந்தப் பொதுவான விலை மாற்றத்தைத்தான் பணவீக்கம் என்கிறோம்.
இப்போது இந்தியாவின் பணவீக்கம் 7 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சில பொருள்கள் மற்றும் சேவைகளின் தொகுதியின் மதிப்புக் கூட்டிய சராசரி விலை (வெயிட்டட் ஆவரேஜ் பிரைஸ்) சென்ற ஓராண்டில் 7% அதிகரித்திருக்கிறது. இந்த ‘மதிப்புக் கூட்டிய சராசரி’ என்ற வார்த்தைகளைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம் போதும். ஒரு கூடை பழங்களின் விலை, சென்ற ஆண்டு 100 ரூபாயாக இருந்து, இந்த ஆண்டு 110 ரூபாய். ஆக விலையேற்றம் பெற்றிருந்தால், கடந்த ஓராண்டில் அதன் பணவீக்க விகிதம் 10%.

பணவீக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது ?
வீட்டுக்கு வீடு, பொருள்களின் முக்கியத்துவம் மாறுபடும். இந்த முக்கியத்துவத்தைத்தான் ஒவ்வொரு பொருளோடும் சேர்க்கப்படும் ‘வெயிட்’ என்று சொல்கிறோம். மத்திய புள்ளியியல் துறை, மக்கள் மத்தியில் சில கணக்கெடுப்புகளை நடத்தி, ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கக்கூடிய ‘வெயிட்டை’ அளவிடுகிறது. விலை மாற்றத்தோடு இந்த வெயிட்டையும் பெருக்கினால் கிடைப்பதே வெயிட்டட் சராசரி விலை மாற்றம். பணவீக்கம் இதனடிப்படையில்தான் அளவிடப்படுகிறது.

பணவீக்கம் என்பது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
பணவீக்கம் ஏழைகளை பாதிக்கக்கூடியது. ஏழ்மையானவர்களும் மத்தியதரக் குடும்பங்களும் அரிசி, கோதுமை, பால், மீன், காய்கறிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகத்தான் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகின்றன. இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைகள் ஏறுமானால், அது ஏழ்மையானவர்களையே அதிகம் பாதிக்கும்.
அரசு எப்படி இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தும்?
இதற்கு, பணவீக்கத்தின் பொருளாதார அர்த்தத்தைப் பார்த்துவிடுவோம். உபரியாகப் புழங்கும் பணம்தான், பொருள் மற்றும் சேவைகளின் தேவையை அதிகப்படுத்திவிடும். அதனால், அரசு பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை உயர்த்துவதன் மூலம், ரிசர்வ் வங்கி இதைச்செய்ய முயற்சிக்கிறது. வட்டிவிகிதங்கள் உயரும்போது, மக்கள் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவார்கள். அதோடு, அந்தப் பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பார்கள். அதன்மூலம் சேமிப்பு உயரும்.
------------
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகள், வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. ஏழைகளின் வாங்கும் சக்தியை பணவீக்கம் குறைத்துவிடுமென்றால், அந்தவகை உயர் வளர்ச்சிக்கு அர்த்தமே இல்லை. பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டுமென்றால், ரிசர்வ் வங்கியை சுதந்திரமாக தனித்தன்மையுடன் இயங்க அனுமதிக்கவேண்டும்.
அரசு, பொறுப்புடன் செலவுகளை மேற் கொள்ளவேண்டும். அதேசமயம், பொருளா தாரத்தில், தேவையும் உற்பத்தியும் சம அளவு பெருகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதை எல்லாம் இந்திய அரசு புரிந்துகொண்டுள்ளது. அதனாலேயே, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தப் பணவீக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று உறுதியாக நம்பலாம்.


நன்றி : நாணயவிகடன்
பதிப்பு : மார்ச் 2007

கருத்துகள் இல்லை: