வெள்ளி, 21 டிசம்பர், 2007

அழகி வைத்த பொட்டு ! - தபூ சங்கர்

'உன் அக்கா குழந்தைக்குக் கன்னத்தில் நீ வைத்துவிட்ட தேவதைப் பொட்டு அழகாக இருக்கிறது' என்றேன்.

'அய்யோ அது திருஷ்டிப் பொட்டு' என்றாய் வேகமாக நீ.

'என்னது திருஷ்டிப் பொட்டா. பொய் சொல்லாதே. ஒரு தேவதை வைக்கும் பொட்டு எப்படி திருஷ்டிப் பொட்டாகும். அது தேவதைப் பொட்டுத்தான்.'

'சும்மா சும்மா என்னைத் தேவதை தேவதை என்று சொல்லி, என் மேல் கண் வைக்காதே' என்றாய் நாணிக்கொண்டே.

'நான் கண் வைப்பதா. நீதான் என் கண்களை எப்போதோ பறித்துக் கொண்டாயே.'

'அப்போ உன் முகத்துல முழிச்சிக்கிட்டு ரெண்டு இருக்கே... அது என்ன' என்றாய்.

'அது நீ என் இதயத்துக்குள் போவதற்காக நான் வைத்திருக்கும் வாசல்!'

'நான் எது கேட்டாலும் உடனே நீ அதுக்கொரு பதில் சொல்கிறாயே... போன ஜென்மத்தில் நீ பெரிய ஞானியாக இருந்திருப்பாயோ?''

'எனக்கு போன ஜென்மம் முடியும்போது, காதலிடம் போய், 'இவளைக் காதலிக்க ஒரு ஜென்மம் போதவில்லை' என்று முறையிட்டிருப்பேன். உடனே 'சரி, இன்னொரு ஜென்மம் தருகிறேன். அதிலும் நீ இவளையே காதலி' என்று எனக்கு இந்த ஜென்மத்தைக் கொடுத்திருக்கும் காதல்.'

'அப்படியா... இந்த ஜென்மமும் முடியும்போது, காதல் உன்னிடம் வந்து, 'இவளைக் காதலித்தது போதுமா?' என்று கேட்டால், நீ என்ன சொல்வாய்?'

'நமக்கு இந்த ஜென்மக் கணக்கெல்லாம் சரிப்பட்டு வராது. ஆகையால், 'காதலே நீ, இந்த மண்ணில் எத்தனை காலம் இருப்பாயோ, அத்தனை காலமும் நானும் இருந்து இவளையே காதலிக்கும்படி எனக்கொரு வரம் கொடு!' என்று கேட்பேன்.'

'காதல் கொடுக்குமா?' என்றாய்.

'கொடுக்கும். ஏன் என்றால் அது காதல்!'

தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை தொகுப்பில் இருந்து.

கருத்துகள் இல்லை: