செவ்வாய், 11 டிசம்பர், 2007

''பதறடிக்கும் 'ஃபாஸ்ட் புட்' பயங்கரம்!


''பதறடிக்கும் 'ஃபாஸ்ட் புட்' பயங்கரம்! ---- இயற்கையை மறந்தால் இதுதான் கதி!

ரொம்பத் தின்னா... குண்டாயிடுவ!

ஐ டோண்ட் கேர்!!

இப்படியரு விளம்பரத்தை அநேகமாக நம்மில் பலரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம்.

விளம்பரம் சரி, நிஜ வாழ்க்கையில்....?

ரொம்பத் தின்னா... திண்டாடுவே... என்றாகி... வெரி வெரி கேர் என்ற நிலைமைக்குக் கொண்டு சென்றுவிடும் என்பதுதான் உண்மை. இதற்கு உதாரணம் தேடி எங்கும் அலைய வேண்டாம்... பலருக்கும் தெரிந்த சொர்கபுரியாக!! இருக்கும் அமெரிக்காவே போதும்!

இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 37% அமெரிக்கர்கள் உடல் பருமன் நோய் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளும், நடுத்தர வயதினரும் தங்களது உடலில் அளவுக்கு அதிகமான சதை, வீங்கிப்போன தொப்பை ஆகியவற்றோடு தினசரி போராடிக்கொண்டுள்ளனர்.இந்தியாவைப் பொறுத்தவரை 15% குழந்தைகள் அதிக உடல் எடையுடன் உள்ளன. அதில் 6% குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை.

இந்தப் பிரச்னைக்கெல்லாம் முக்கிய காரணம்... இயற்கையை மறந்து, நாம் வெகுதூரம் பயணிக்க ஆரம்பித்ததுதான். இயற்கையாக கிடைக்கும் உணவுப்பொருட்களை உண்டு வாழ்ந்த மனிதன், நெருப்பைக் கண்டுபிடித்த பிறகு, வேக வைத்து தின்னும் பழக்கத்துக்கு மாறினான். அதுவே கொஞ்சம்போல பாதிப்புதான்... என்றாலும், பெரிய அளவில் பாதித்துவிடவில்லை. ஆனால், காலப்போக்கில்... அறிவியல் கண்டுபிடிப்புகளின் வேகத்தில் காசு பார்க்கும் வெறியோடு கண்டதையும் கண்டுபிடித்ததன் விளைவு... இன்றைக்கு பெரிய அளவில் விஸ்வரூபமெடுத்து மனித இனத்தை ஆட்டிப்பார்க்கிறது.

எல்லாமே ரெடிமேட் என்றாகிவிட்ட இந்த காலகட்டத்தில் சிப்ஸ், பர்கர், சாண்ட்விச், பிரெஞ்ச் ஃபிரை இத்யாதி இத்யாதி வகையிலான துரித உணவுகள்(ஃபாஸ்ட் ஃபுட்) மூலைமுடுக் குகளிலெல்லாம் கூட கிடைக்கின்றன. இவற்றைக் கணக்கு வழக்கில்லாது உண்பதுதான் உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியக் காரணம் என்கின்றன ஆய்வுகள்!

இதன் காரணமாக ரத்த அழுத்தம், இதயநோய் என்று பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்தபோதிலும், அமெரிக்கர் களின் ஃபாஸ்ட் ஃபுட் மோகம் குறைந்தபாடில்லை. அந்த நாட்டைக் காப்பியடிப்பதில் முன்னணியில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளிலும் அதேபோன்றதொரு உணவுக் கலாசாரம் வேகவேமாகப் பரவிக் கொண்டிருப்பது வேதனையூட்டும் செய்தி.

ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் உணவு வகைகளை விற்பதற் காக உலகம் முழுவதும் செய்யப்படும் விளம்பரச் செலவு எவ்வளவு தெரியுமா? 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ருபாய்! விளம்பரத்துக்கே இத்தனை ஆயிரம் கோடிகள் என்றால்... விற்பனை லாபம்...? அம்மாடியோவ்!

கஷ்டப்பட்டு தலையில் சுமந்து வீட்டின் வாசல் வரை வரும் கீரைக்கார பெண்மணியிடம் பல மணி நேரம் பேரம் பேசுகிறார்கள். இத்தனைக்கும் அவர் கொண்டு வருவது அத்தனையும் இயற்கைத் தங்கம். அவருக்குக் கொடுக்கும் காசு, நாலு விவசாயிகளையும் சேர்த்து வாழவைக்கும். ஆனால், கண்ணாடிக் கூண்டுக்குள் ஜிலுஜிலுவென உட்கார வைத்து பரிமாறப்படும் செயற்கைப் பண்டங்கள் யானை விலை, குதிரை விலையாக இருந்தாலும் வாங்கித் தின்றுவிட்டு, பில் தொகைக்கும் மேலாக கூடுதலாக பத்து, இருபது, நூறு என்று அள்ளிக் கொடுத்துவிட்டு வருகிறார்கள். அதுதான் இந்த மாயா உலகத்தின் நவநாகரிக விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த மாயையை உடைத்தெறிந்து, மக்களை ஃபாஸ்ட் ஃபுட் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று யாருக்குமே தோன்ற வில்லையா...?

எத்தனையோ பேர் பலப்பல சமயங்களில் இதைப்பற்றி சிந்தித் துள்ளனர். ஆனால், அமெரிக்கா வின் மேற்கு வர்ஜினியாவைச் சேர்ந்த மார்கன் ஸ்பர்லாக் என்ற திரைப்பட இயக்குனர் எடுத்த முயற்சி முற்றிலும் வித்தியாசமானது என்பது மட்டுமல்ல வில்லங்கமானதும் கூட!

மார்கன் ஸ்பர்லாக் செய்ததெல்லாம் தினசரி 3 வேளை உலகின் மிகப்பெரிய ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனமான மெக்டொனால்ட் கடைகளில் உள்ள உணவுப்பொருட்களை மட்டுமே ஒரு மாதத்துக்கு உணவாகக் கொண்டதுதான். எந்தவித உடற்பயிற்சியும் அவர் செய்யவில்லை. இப்படி உண்பதையும், அதனால் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் ஒளிப்பதிவாளர் ஸ்காட்டை வைத்து படமாக்கினார். உடலை அவ்வப்போது பரிசோதித்து அறிக்கை அளிக்க 3 டாக்டர்களையும் நியமித்துக் கொண்டார். அமெரிக்காவில் உள்ள 20 நகரங்களுக்கு பயணம் செய்து நூற்றுக்கணக்கானோரிடம் இதுபற்றிப் பேசினார், பேட்டிகள் எடுத்தார்.

இந்த முயற்சிக்கு வெற்றி (?) கிடைக்கத் தொடங்கியது. 3&வது வாரத்திலேயே ஸ்பார்லாக்கின் உடல்நிலை ஆட்டம் கொடுத்தது. ஏதோ கொஞ்சூண்டு உடல் பெருக்கும், கொஞ்சம் பி.பி. அதிகரிக்கும் அவ்வளவுதானே, பார்த்துக்கலாம் என எண்ணியிருந்த அவருடைய டாக்டர்களுக்கும் கூட கிலி பிடித்துக் கொண்டது. காரணம், 25 நாட்களுக்குள்ளாகவே மார்கனின் உடல் எடை 11 கிலோ கூடியது; மூச்சு விட சிரமப்பட்டார்; கல்லீரல் கடுமையாக பாதிக்கப் பட்டது; இதயத்துடிப்பு தாறுமாறானது; கொலஸ்ட்ரால் 10 புள்ளிகள் எகிறியது. பயந்து போன ஸ்பர்லாக்கின் நண்பர்களும், டாக்டர்களும் விஷப்பரீட்சை வேண்டாம் என்று மன்றாடினார்கள். ஆனால், முன்வைத்த காலை பின் வைக்கமால் திட்டமிட்ட படி 30 நாட்களும் படப்பிடிப்பை நடத்தி முடித்தார். படத்துக்கு ஸ்பர்லாக் வைத்த பெயர். சூப்பர் சைஸ் மீ (Super Size Me).

ஃபாஸ்ட் ஃபுட், மனிதனுக்கு ஏற்படுத்தும் பிரச்னைகள் எப்படி இருக்கும் என்பதை ஊருக்குச் சொல்ல, தன்னையே பணயம் வைத்து எடுத்த ஆவணப்படத்தை ஸ்பர்லாக் வெளியிட்டபோது தான் அமெரிக்க மக்களுக்குக் கொஞ்சம் உரைக்கத் தொடங்கியது. (ஆடிப்போன மெக்டொனால்ட் நிறு வனம், இந்தப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை மாற்று வதற்காக மட்டுமே பல கோடி டாலர்களை அள்ளி இறைத்து விளம்பரம் செய்ய வேண்டியிருந்தது).

சரி... இந்த தகவலெல்லாம் நமக்கெதற்கு? அதெல் லாம் அமெரிக்காவுக்குத்தானே என்று நம்மில் சிலர் எண்ணலாம். ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் வீதிக்கு வீதி கால் பதித்துவரும் ஃபாஸ்ட் ஃபுட், மற்றும் பீட்சா கார்னர்கள் நம் வீட்டுக் குழந்தைகளையும், பள்ளி மாணவ &மாணவிகளையும் தங்களது வளையத்துக்குள் கொண்டுவரத்தொடங்கி நாளாகிவிட்டன.

கால்சென்டர், பீ.பி.ஓ., நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோருக்கு பெரும்பாலும் அந்த நிறுவனங்களின் கேன்டீன்களில் சாப்பிடக் கிடைப்பது அல்லது தரப்படுவது இத்தகைய ஃபாஸ்ட் ஃபுட்கள் தான். கல்லூரிகளுக்கு (குறிப்பாக பெண்கள் கல்லூரி) அருகில் உள்ள பீட்சா கார்னர்களிலும், ஃபாஸ்ட் ஃபுட் கடைகளிலும் கொஞ்சம் எட்டிப் பார்த்தாலே எத்தனை இளசுகள் இதனை விரும்பிச் சாப்பிடுகின்றன என்பதுடன், பெரும்பாலானோர் மதிய உணவாகவே இவற்றைத்தான் உண்கின்றனர் என்பதைப் பார்க்கமுடிகிறது.

வெளிநாட்டு நாகரிகங்களை பின்பற்றும் பணக்கார குடும்பங்கள் மட்டுமல்லாமல், அவர்களைப் பார்த்து தங்களின் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டே இருக்கும் நடுத்தர குடும்பத்தினரும் இத்தகையக் கடைகளை மொய்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உடல் -பருத்த இளசு களும், சிறுவர், சிறுமிகளும் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால்...? என விக்கிரமாதித்தன் கதைகளில் கடைசியில் வருவதைப்போல, உண்மையைச் சொல்லப்போனால் நுற்றுக்கணக்கான ருபாய் செலவு செய்து ஒரு பீட்சாவையோ, பர்கரையோ, பன்னாட்டு குளிர் பானங்களையோ... மணிக்கணக்கில் சாவகாசமாக உட்கார்ந்து தின்று, வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவதைவிட, குறைந்த விலையில் கிடைக்கும் நல்ல காய்கறிகளை வாங்கி, உணவில் சேர்த்து உண்ணப் பழகிக்கொண்டால் மருத்துவச் செலவும் மிச்சம், கடைசிமுச்சுவரை யாருக்கும் தொல்லை தராமல் நிம்மதியாக வாழலாம்.

நன்றி : விகடன்

கருத்துகள் இல்லை: