வியாழன், 20 டிசம்பர், 2007

முதுமை

குறிப்பு :
திரு. அ : மாமுசு எதுக்கு இதெல்லாம் , கட்டுரை தலைப்பு ரொம்ப புல்லரிக்குதே !
திரு ஆ : என்ன பண்ண ராச ,
நம்ம அம்மா அப்பா வ புரிச்சிக்க , பிறகு,
நாமும் ஒரு நாள் இந்த பஸ்டாப்புக்கு(முதுமை) வரத்தாபோறம் , அதனால அந்த மனநிலை எப்படி இருக்குமுனு தெரிச்சிக்க வேண்டாமா !
''எனக்கு வயதாகிவிட்டது. இப்பல்லாம் யாருக்கும் நான் வேண்டாதவனாகி விட்டேன்'' என்று உள்ளுக்குள் ஊமைப்புலம்பல்களில் எண்ணற்ற ஆண்கள். முதுமை என்பது ஆரம்பத்தின் முடிவு அல்லது முடிவின் ஆரம்பம். மனிதனின் சார்புநிலை உண்மையாயிருந்தாலும் இளமையில் தணித்து இயங்க ஒரு சிறு முயற்சியாவது இருந்திருக்கும். முதுமையோ நம்பிக்கைகளின் இலையுதிர்காலம்.
''வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதம் அடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே
வருவது போவது ஒருமுதுகூனு
மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல்
மொழிந்து துயில் வரும் நேரம் இருமல் பொறாது
தொண்டையும் நெஞ்சு உலர்ந்து வறண்டு
துகிலும் இழந்து சுணையும் அழிந்து''
_ என பட்டினத்துப் பிள்ளையார் பாடல் மிக அழகாக முதுமையை விளக்குகிறது.
65 வயதிருக்கும் அவருக்கு. பிள்ளைகளைப் பார்த்துப் பார்த்து வளர்த்தார். எல்லோரையும் நன்றாகப் படிக்கவும் வைத்தார். அவரிடம் மாறாத பழக்கம் ஒன்று இருந்தது. வாங்கும் நியூஸ் பேப்பராகட்டும், அணியும் பனியனாகட்டும், பற்பசையாகட்டும் எப்போதும் ஒரே 'ப்ராண்ட்'தான் வாங்குவார். ஒரு குறிப்பிட்ட பேப்பரைக் காலையில் காஃபியுடன் படித்தால்தான் அவருக்கு நிம்மதி. துணைவி இருந்தவரை எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரின் மனைவி இறந்ததால், தற்போது மூத்த பிள்ளையோடு இருக்கிறார்.
பிள்ளைக்கு வேறொரு நியூஸ் பேப்பர் பிடிக்கும். ஒரே வீட்டில் இரண்டு நியூஸ் பேப்பர் வேண்டாம் என்று, இவருக்குப் பிடித்த நியூஸ் பேப்பரை நிறுத்திவிட்டார்கள். அதிலிருந்து கொஞ்சம் வருத்தத்திற்குள்ளாகிவிட்டார்.
மேலே கூறப்பட்டது சின்ன விஷயம்தான். ஆனால் வயதான காலத்தில் சிறு விஷயங்கள்கூட 'மைக்ரோஸ்கோப்' மூலமாகப் பார்க்கப்படுகிறது. சாதாரண நிகழ்வுகளின் மாறுதல்கள் கூட அதிக அளவில் பாதிக்கின்றன.
முதுமையில்தான் உடல்நோய்களின் அணிவகுப்பு கொஞ்சம் அதிகமாகவே அணிவகுக்க ஆரம்பிக்கும். இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, இவற்றைத்தவிர ஐம்புலன்களின் செயல்பாட்டில் மெல்ல மெல்ல குறைபாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். காது கேட்காத நிலையில் மகனும் மருமகளும் சிரித்துப் பேசினால்கூட, தன்னைப் பற்றி ஏதேனும் கேலி பேசுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படும். வீட்டில் தனக்குப் பிடிக்காத விஷயங்கள் நிகழும்போது, அந்த சந்தேகங்கள் இறுகிப்போக வாய்ப்பிருக்கிறது.
பார்வைக் குறைபாடுகள் சார்பு நிலையை அதிகரிக்கும். உடல் நலக்குறைவால் வெளியில் செல்லமுடியாத போது வீட்டில் உள்ளவர்கள் தன்னுடன் அதிகநேரம் செலவிடவேண்டும், தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மேலோங்கும்.
ஓர் ஆணின் வாழ்வில் இரண்டு சுற்றுகள் இருக்கின்றன. இரண்டு சுற்றுகளில் ஆணின் கூட வருபவர்கள் இரண்டு பெண்கள். முதல் சுற்றில் பிறப்பு முதல் திருமணம் ஆகும்வரை ஓர் ஆணை, தாய் கவனித்துக் கொள்கிறார். அடுத்த சுற்றில் திருமணத்திற்குப் பிறகு மனைவி கூட வருகிறார். இவர்கள் இரண்டு பேரும் ஓர் ஆணின் மனோபாவத்தை நன்கு அறிந்தவர்கள். தாய் பெற்றதால் வளர்த்துத் தெரிந்தவர். மனைவி உடன் வாழ்ந்ததால் கற்றவர். தாய் வளரும் பருவத்தில் ஓர் ஆணின் மாறும் குணங்களை நன்கு தெரிந்தவர். ஆனால் மனைவியோ (கல்யாணம் முதல் கடைசி வரை இருப்பதால்) அந்த ஆணின் மாறாத குணங்களை நன்கு புரிந்து வைத்திருப்பவர். அவருடைய கோபதாபங்கள், சென்சிட்டிவ்வான விஷயங்கள் இவையெல்லாம் அவருக்கு அத்துப்படி.
''சரி, சரி இவர் இப்படித்தான்'' என்று மனைவியின் சலிப்பு வசனங்களில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு பெண் ஓர் ஆணைவிட அதிக அளவில் உடலியல் ரசாயன ரீதியாகவும், வாழ்வியல் நிகழ்வு ரீதியாகவும் அதிக அளவு பிரச்னைக்குள்ளாகிறாள்.
அனுபவங்களை வாழ்க்கையை நடத்திச் செல்வதால், முதுமைக் காலத்தில் பெண்களுக்கு பிரச்னைகளை எதிர்கொள்வதில் சங்கடம் அவ்வளவாக இருப்பதில்லை. ஆனால், ஆணுக்கு வயதான காலத்தில் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது பயமும் பதட்டமும் ஏற்படுகிறது. மனைவி ரூபத்தில் 'சுமை தாங்கி' இல்லாதபோது, அடுத்தவர்கள் மேல் கோபம் ஏற்படுகிறது. மனைவி இருக்கும்போது அவர் 'இடி தாங்கியாய்' சமாளித்துக் கொள்கிறார். மனைவி இல்லாதபோது மற்றவர்களின் திசையை நோக்கிப் புயல்.
மகன் மேல் அல்லது மருமகள் மேல் கோபத்தைக் காண்பிக்க முடியாதபோது, தன்மேலேயே கோபம் ஏற்படுகிறது. ஊமைக்காயங்களால் மன வருத்தம் ஏற்படுகிறது. பென்ஷனாக வரும் பணம் ஓர் ஆணின் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும், முந்தைய காலங்களில் சரிவர திட்டமிடாமலிருந்தால், நோய்வாய்ப்படும் போது மகனையோ, மகளையோ சார்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது...
எனக்கு நேற்று என் செல்ஃபோனில் ஒரு மெசேஜ் வந்தது. 'வாழ்வின் பெரும்பகுதியை உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டு சம்பாதிக்கிறோம். பின், பணத்தின் பெரும் பகுதியைச் செலவழித்துக்கொண்டு வாழ்வின் சிறுபகுதியில் உடல்நலத்தைக் கண்காணிக்கிறோம். விளையாட்டான இந்தச் செய்தியின் பின்பகுதியில் ஓர் உண்மை இருக்கிறது. முதுமையில் வரும் நோய்கள் எல்லாம் 'காம்ப்ளிகேடட்' வகையானவை. சிகிச்சை எடுப்பதற்குள் சிலர் லட்சாதிபதியாகிவிடுவார்கள். (முன்பு கோடீஸ்வரர்களாய் இருந்தவர்கள்) மருத்துவர் என்ற முறையில் ஒரு கஷ்டமான உண்மையைச் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. (மெடிக்கல் இன்ஷ¨ரன்ஸ் தவிர்த்து) இந்த உலகம் ஒரு லெவலுக்கு மேல் செலவு செய்யத் தயாராயிருக்கிறது. மற்றவர்களைப் பொறுத்தமட்டில் முக்கியமாக வயதானவர்களின் விஷயத்தில் ''முடிஞ்ச அளவுக்குப் பாருங்க டாக்டர், அப்புறம் ஆண்டவன் விட்டவழி'' என்று சமாதானமாகி விடுகின்றனர். ஆகவே, மருத்துவச் செயல்களுக்காகவாவது 'இளமையில் சேமி _ முதுமையில் செலவழிக்க' என்பது இவர்களின் சித்தாந்தமாக இருக்கவேண்டும்.
முதுமையில் தனித்திருக்கும் நேரங்கள் அசைபோடுதலில் முடியும். வருத்தம் மெல்ல எட்டிப்பார்க்கும். கடைசிவரை கூடவருவது நம் ரசனைகள்தான். சிறு ஆசைகள் மற்றும் சிறு எதிர்பார்ப்புகளுக்கு என்றுமே சேதாரம் வராது.
நினைக்கத் தெரிந்த மனதுக்கு மறக்கவும் தெரியும் முதுமையில். மறதி நோய் பொதுவாக அறுபதுகளின் தொடக்கத்தில் ஆரம்பமாகும். பழகிய இடங்களும், பழகிய விஷயங்களும் மறக்கும். வீட்டை விட்டுக் கிளம்பிப் போய்விடுகிறார். பக்கத்துத் தெருவோ அல்லது தூரத்திலிருக்கும் மெயின் ரோடோ அங்கு போய்விடுகிறார். திரும்பி வரத் தெரிவதில்லை. தினமும் இவருக்கு ஒருத்தரை காவல் போடவேண்டியதிருக்கிறது' என்று உறவினர்கள் கூறுவர். நினைவுகளின் தொடர்ச்சியில் இடைவெளிகள் ஏற்பட்டு மறதி மட்டுமல்ல, சந்தேகப் பிரச்னைகளும் அதிகரிக்கும். உணர்ச்சிகளின் இடப்பெயர்ச்சியில் தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்தல், திடீரென அழுதல் இவையெல்லாம் தோன்றும். பத்திரிகை படித்தல், குறுக்கெழுத்துப் புதிர், பாட்டுக் கேட்டல், கார்டனிங் இவைகளுக்கெல்லாம் மருந்துகளோடு கொஞ்சம் வேதனையைக் குறைக்கும்.
அறுபது வயது பெரியவர் ஒருவர் மிகுந்த வருத்தத்தில் வந்தார். விசாரித்ததில் தன்னுடைய சொத்து அனைத்தையும் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார். அதற்குப்பிறகு அவரை யாருமே கண்டு கொள்வதில்லை. சின்னச் சின்ன செலவுகளுக்குக்கூட பிள்ளைகளிடம் கையேந்தும் நிலைமை. தன்னுடைய இயலாமையால் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகிவிட்டார்.
''என் சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்காமலிருந்தால், நான் இந்த நிலைக்கு ஆளாகாமல் இருந்திருப்பேன்'' என்று புலம்பினார். அந்தப் புலம்பலிலும் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
முடிவாக,
இளமையில் கல்வி முதுமையில் கொஞ்சம் சேமிப்பு. இவையெல்லாம் ஓர் ஆணின் நல்மனவாழ்வுக்கு வழி.
நன்றி : குமுதம் - ஹல்த்

கருத்துகள் இல்லை: