செவ்வாய், 18 டிசம்பர், 2007

இனிமேல் எனக்குப்  பரிசு  தராதே! - தபூ சங்கர்


'என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்தப் பரிசும் நீ தராதே!' என்றேன்.
கலங்கிப் போனாய். 'எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா?' என்றாய் உடைந்த குரலில்.
'உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.
உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக் கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப் பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ளமுடியும், சொல்.
எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.
'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.
'ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!'

தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை தொகுப்பில் இருந்து.

திங்கள், 17 டிசம்பர், 2007

அம்மா-அப்பா....நீ-நான் -தபூ சங்கர்

உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!
அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.
ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா எனக்கு மிகச் சிறந்த நண்பன்.
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன்.
'அய்யோ பாவம்!' என்றார் அப்பா.
'ஏம்ப்பா..?'
'டேய்... நானும் இப்பிடித்தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா - அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே.சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அப்படி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.
அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே முடிவுசெய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்வதென்று!
ச்சீ... போடா!
அந்தப் பூங்காவில் அமர்ந்திருந்த பெண்கள் எல்லாம் சொல்லிவைத்த மாதிரி ஆளுக்கொரு புல்லைப் பிடுங்கி, கொஞ்சம் கொஞ்சமாய்க் கிள்ளிப்போட்டபடியே தன் அருகில் இருக்கும் காதலனிடம் பேசிக்கொண்டு இருக்கையில்... நீ மட்டும் உன்னைச் சுற்றி முளைத்திருந்த புற்களை, உன் அழகிய கைகளால் மெல்ல வருடிவிட்டபடியே என்னுடன் பேசிக்கொண்டு இருந்தாய்.
உன் செய்கை உன் அழகை இன்னும் அழகாக்குவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
'என்ன' என்று கேட்ட உன்னிடம்... மற்ற பெண்களின் செயல்களையும், உன் செய்கையையும் சுட்டிக்காட்டினேன்.
உடனே நீ வருத்தம்கொண்டு, 'என்ன பெண்கள் இவர்கள்... புல்லைப் பிடுங்கிக் கிள்ளிக்கிள்ளிப் போட்டுக்கொண்டு... அது என்ன பாவம் செய்தது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்?' என்றாய் என்னிடம்.
'அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். ஏன் என்றால் அவர்கள் பெண்கள். நீ இப்படித்தான் செய்வாய். ஏன் என்றால் நீ தேவதை!' என்றேன்.
'ச்சீ போடா' என்று என் கன்னம் தட்டினாய்.
நீ 'நட்சத்திரம் விழாது' என்றாய்.
'உண்மைதான் ஒரு நட்சத்திரம் எப்படிப்பட்டது என்று இன்னொரு நட்சத்திரத்திற்குத்தானே' தெரியும் என்றேன்.
அதற்கும் உதிர்த்தாய் அற்புதமாய் ஒரு 'ச்சீ போடா.'
நீ உதிர்க்கும் 'ச்சீ போடா' என்கிற அந்த வார்த்தைக்காகத்தான் நான் தினமும் காத்திருக்கிறேன். ஏனென்றால் நீ ஒவ்வொரு முறை அப்படிச் சொல்லும்போதும் என் உயிரோடு இன்னும் கொஞ்சம் நெருங்கி வருகிறாய்.

'நம்மை மீறி நாளை என்ன நடந்துவிடப் போகிறது'

ந்தியர்கள் பாசிட்டிவான எண்ணம் கொண்டவர்கள். எல்லாம் நல்லவிதமாகவே நடக்கும்! நம்மை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை கொண்டவர்கள்' என்கிறது ஒரு சர்வே!

நல்ல விஷயம்தானே... இதை ஏன் கவலையோடு சொல்கிறீர்கள் என்கிறீர்களா..? அவர்கள் எடுத்த சர்வே எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பற்றி! இப்போது சொல்லுங்கள், இது கவலைக்குரிய விஷயமா இல்லையா!

ஏ.எக்ஸ்.ஏ. ஆசியா லைப் என்ற சர்வதேச இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம் எட்டு ஆசிய நாடுகளிடையே அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாழ்க்கையைப் பற்றி சராசரியைவிட அதிகமாகச் சம்பாதிக்கும், செலவழிக்கும், படித்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றொரு சர்வேயை நடத்தியது. அதில்தான் இந்தியாவைப் பற்றி இப்படியரு அதிர்ச்சியான தகவல் கிடைத்திருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பார்தி நிறுவனத்துடன் சேர்ந்து பார்தி ஏ.எக்ஸ்.ஏ லைப் இன்ஷ¨ரன்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது.

ஆசியாவிலுள்ள இந்தியா, சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய இடங்களில், 'வேலை, குடும்பம், உடல்நலம், ஓய்வுக்-காலம் ஆகியவற்றுக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம்' பற்றி 25 முதல் 50 வயது வரையானவர்களிடையே ஒரு சர்வே நடத்தப்-பட்டது.

'நம்மை மீறி நாளை என்ன நடந்துவிடப் போகிறது' என்ற மனோபாவத்தை பாசிட்டிவான எண்ணம் என்பதைவிட எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடலில் பலவீனமாக இருப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் இந்தியாவில் 82 சதவிகிதம் பேர் ஓய்வுக்காலத்தைப் பற்றிய தெளிவான திட்டமிடல் இல்லாமல் இருப்பதாக சர்வே சொல்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதுவே பிலிப்பைன்ஸில் 78%, சீனாவில் 69% என்ற அளவில் இருக்கிறது.

ஓய்வுக்காலத்தில் சந்தோஷமாக வாழவேண்டும் என்ற ஆசைமட்டும் இருக்கிறது. ஆனால், அதற்காக இப்போது வாழும் ஆடம்பர வாழ்க்கையில் சிறு தியாகம்கூடச் செய்து ஓய்வுக்-காலத்துக்காக ஒதுக்கி வைக்கத் தயாரில்லை என்ற மனநிலைதான் பெரும்பான்மையான ஆசியர்களிடம் இருக்கிறது என்ற வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறது இந்த சர்வே!

ஓய்வுக்காலம்தான் இப்படி என்-றால், உடல்நலம் சார்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வதிலும் இந்தியர்கள் பெரிதாக ஆர்வம் காட்ட-வில்லை என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவல்! வெறும் 7 சதவிகிதம் பேர்தான் ஹெல்த் இன்ஷ¨ரன்ஸ் எடுத்திருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, 21 சதவிகிதம் பேருக்கு ஹெல்த் இன்ஷ¨ரன்ஸ் பற்றிய தெளிவு இருக்கிறது.

சர்வேயின் முடிவில் இந்தியர்கள் வேலைக்குத்தான் முதலிடம் கொடுப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. உடல்நலத்துக்கு இரண்டாம் இடமும், குடும்பத்துக்கு மூன்றாம் இடமும் ஓய்வுக்காலத்துக்கு கடைசி இடமும் கொடுத்திருக்கிறார்கள்.

இன்ஷ¨ரன்ஸில் இந்தியாவின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி-யிருக்கிறது இந்த சர்வே. எதற்கு எந்த இடம் கொடுத்-திருக்கிறோம் என்பதல்ல... எல்லாவற்றுக்கும் போதிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே இப்-போதைய தேவை!

நன்றி : விகடன்

செவ்வாய், 11 டிசம்பர், 2007

''பதறடிக்கும் 'ஃபாஸ்ட் புட்' பயங்கரம்!


''பதறடிக்கும் 'ஃபாஸ்ட் புட்' பயங்கரம்! ---- இயற்கையை மறந்தால் இதுதான் கதி!

ரொம்பத் தின்னா... குண்டாயிடுவ!

ஐ டோண்ட் கேர்!!

இப்படியரு விளம்பரத்தை அநேகமாக நம்மில் பலரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம்.

விளம்பரம் சரி, நிஜ வாழ்க்கையில்....?

ரொம்பத் தின்னா... திண்டாடுவே... என்றாகி... வெரி வெரி கேர் என்ற நிலைமைக்குக் கொண்டு சென்றுவிடும் என்பதுதான் உண்மை. இதற்கு உதாரணம் தேடி எங்கும் அலைய வேண்டாம்... பலருக்கும் தெரிந்த சொர்கபுரியாக!! இருக்கும் அமெரிக்காவே போதும்!

இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 37% அமெரிக்கர்கள் உடல் பருமன் நோய் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளும், நடுத்தர வயதினரும் தங்களது உடலில் அளவுக்கு அதிகமான சதை, வீங்கிப்போன தொப்பை ஆகியவற்றோடு தினசரி போராடிக்கொண்டுள்ளனர்.இந்தியாவைப் பொறுத்தவரை 15% குழந்தைகள் அதிக உடல் எடையுடன் உள்ளன. அதில் 6% குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை.

இந்தப் பிரச்னைக்கெல்லாம் முக்கிய காரணம்... இயற்கையை மறந்து, நாம் வெகுதூரம் பயணிக்க ஆரம்பித்ததுதான். இயற்கையாக கிடைக்கும் உணவுப்பொருட்களை உண்டு வாழ்ந்த மனிதன், நெருப்பைக் கண்டுபிடித்த பிறகு, வேக வைத்து தின்னும் பழக்கத்துக்கு மாறினான். அதுவே கொஞ்சம்போல பாதிப்புதான்... என்றாலும், பெரிய அளவில் பாதித்துவிடவில்லை. ஆனால், காலப்போக்கில்... அறிவியல் கண்டுபிடிப்புகளின் வேகத்தில் காசு பார்க்கும் வெறியோடு கண்டதையும் கண்டுபிடித்ததன் விளைவு... இன்றைக்கு பெரிய அளவில் விஸ்வரூபமெடுத்து மனித இனத்தை ஆட்டிப்பார்க்கிறது.

எல்லாமே ரெடிமேட் என்றாகிவிட்ட இந்த காலகட்டத்தில் சிப்ஸ், பர்கர், சாண்ட்விச், பிரெஞ்ச் ஃபிரை இத்யாதி இத்யாதி வகையிலான துரித உணவுகள்(ஃபாஸ்ட் ஃபுட்) மூலைமுடுக் குகளிலெல்லாம் கூட கிடைக்கின்றன. இவற்றைக் கணக்கு வழக்கில்லாது உண்பதுதான் உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியக் காரணம் என்கின்றன ஆய்வுகள்!

இதன் காரணமாக ரத்த அழுத்தம், இதயநோய் என்று பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்தபோதிலும், அமெரிக்கர் களின் ஃபாஸ்ட் ஃபுட் மோகம் குறைந்தபாடில்லை. அந்த நாட்டைக் காப்பியடிப்பதில் முன்னணியில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளிலும் அதேபோன்றதொரு உணவுக் கலாசாரம் வேகவேமாகப் பரவிக் கொண்டிருப்பது வேதனையூட்டும் செய்தி.

ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் உணவு வகைகளை விற்பதற் காக உலகம் முழுவதும் செய்யப்படும் விளம்பரச் செலவு எவ்வளவு தெரியுமா? 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ருபாய்! விளம்பரத்துக்கே இத்தனை ஆயிரம் கோடிகள் என்றால்... விற்பனை லாபம்...? அம்மாடியோவ்!

கஷ்டப்பட்டு தலையில் சுமந்து வீட்டின் வாசல் வரை வரும் கீரைக்கார பெண்மணியிடம் பல மணி நேரம் பேரம் பேசுகிறார்கள். இத்தனைக்கும் அவர் கொண்டு வருவது அத்தனையும் இயற்கைத் தங்கம். அவருக்குக் கொடுக்கும் காசு, நாலு விவசாயிகளையும் சேர்த்து வாழவைக்கும். ஆனால், கண்ணாடிக் கூண்டுக்குள் ஜிலுஜிலுவென உட்கார வைத்து பரிமாறப்படும் செயற்கைப் பண்டங்கள் யானை விலை, குதிரை விலையாக இருந்தாலும் வாங்கித் தின்றுவிட்டு, பில் தொகைக்கும் மேலாக கூடுதலாக பத்து, இருபது, நூறு என்று அள்ளிக் கொடுத்துவிட்டு வருகிறார்கள். அதுதான் இந்த மாயா உலகத்தின் நவநாகரிக விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த மாயையை உடைத்தெறிந்து, மக்களை ஃபாஸ்ட் ஃபுட் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று யாருக்குமே தோன்ற வில்லையா...?

எத்தனையோ பேர் பலப்பல சமயங்களில் இதைப்பற்றி சிந்தித் துள்ளனர். ஆனால், அமெரிக்கா வின் மேற்கு வர்ஜினியாவைச் சேர்ந்த மார்கன் ஸ்பர்லாக் என்ற திரைப்பட இயக்குனர் எடுத்த முயற்சி முற்றிலும் வித்தியாசமானது என்பது மட்டுமல்ல வில்லங்கமானதும் கூட!

மார்கன் ஸ்பர்லாக் செய்ததெல்லாம் தினசரி 3 வேளை உலகின் மிகப்பெரிய ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனமான மெக்டொனால்ட் கடைகளில் உள்ள உணவுப்பொருட்களை மட்டுமே ஒரு மாதத்துக்கு உணவாகக் கொண்டதுதான். எந்தவித உடற்பயிற்சியும் அவர் செய்யவில்லை. இப்படி உண்பதையும், அதனால் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் ஒளிப்பதிவாளர் ஸ்காட்டை வைத்து படமாக்கினார். உடலை அவ்வப்போது பரிசோதித்து அறிக்கை அளிக்க 3 டாக்டர்களையும் நியமித்துக் கொண்டார். அமெரிக்காவில் உள்ள 20 நகரங்களுக்கு பயணம் செய்து நூற்றுக்கணக்கானோரிடம் இதுபற்றிப் பேசினார், பேட்டிகள் எடுத்தார்.

இந்த முயற்சிக்கு வெற்றி (?) கிடைக்கத் தொடங்கியது. 3&வது வாரத்திலேயே ஸ்பார்லாக்கின் உடல்நிலை ஆட்டம் கொடுத்தது. ஏதோ கொஞ்சூண்டு உடல் பெருக்கும், கொஞ்சம் பி.பி. அதிகரிக்கும் அவ்வளவுதானே, பார்த்துக்கலாம் என எண்ணியிருந்த அவருடைய டாக்டர்களுக்கும் கூட கிலி பிடித்துக் கொண்டது. காரணம், 25 நாட்களுக்குள்ளாகவே மார்கனின் உடல் எடை 11 கிலோ கூடியது; மூச்சு விட சிரமப்பட்டார்; கல்லீரல் கடுமையாக பாதிக்கப் பட்டது; இதயத்துடிப்பு தாறுமாறானது; கொலஸ்ட்ரால் 10 புள்ளிகள் எகிறியது. பயந்து போன ஸ்பர்லாக்கின் நண்பர்களும், டாக்டர்களும் விஷப்பரீட்சை வேண்டாம் என்று மன்றாடினார்கள். ஆனால், முன்வைத்த காலை பின் வைக்கமால் திட்டமிட்ட படி 30 நாட்களும் படப்பிடிப்பை நடத்தி முடித்தார். படத்துக்கு ஸ்பர்லாக் வைத்த பெயர். சூப்பர் சைஸ் மீ (Super Size Me).

ஃபாஸ்ட் ஃபுட், மனிதனுக்கு ஏற்படுத்தும் பிரச்னைகள் எப்படி இருக்கும் என்பதை ஊருக்குச் சொல்ல, தன்னையே பணயம் வைத்து எடுத்த ஆவணப்படத்தை ஸ்பர்லாக் வெளியிட்டபோது தான் அமெரிக்க மக்களுக்குக் கொஞ்சம் உரைக்கத் தொடங்கியது. (ஆடிப்போன மெக்டொனால்ட் நிறு வனம், இந்தப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை மாற்று வதற்காக மட்டுமே பல கோடி டாலர்களை அள்ளி இறைத்து விளம்பரம் செய்ய வேண்டியிருந்தது).

சரி... இந்த தகவலெல்லாம் நமக்கெதற்கு? அதெல் லாம் அமெரிக்காவுக்குத்தானே என்று நம்மில் சிலர் எண்ணலாம். ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் வீதிக்கு வீதி கால் பதித்துவரும் ஃபாஸ்ட் ஃபுட், மற்றும் பீட்சா கார்னர்கள் நம் வீட்டுக் குழந்தைகளையும், பள்ளி மாணவ &மாணவிகளையும் தங்களது வளையத்துக்குள் கொண்டுவரத்தொடங்கி நாளாகிவிட்டன.

கால்சென்டர், பீ.பி.ஓ., நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோருக்கு பெரும்பாலும் அந்த நிறுவனங்களின் கேன்டீன்களில் சாப்பிடக் கிடைப்பது அல்லது தரப்படுவது இத்தகைய ஃபாஸ்ட் ஃபுட்கள் தான். கல்லூரிகளுக்கு (குறிப்பாக பெண்கள் கல்லூரி) அருகில் உள்ள பீட்சா கார்னர்களிலும், ஃபாஸ்ட் ஃபுட் கடைகளிலும் கொஞ்சம் எட்டிப் பார்த்தாலே எத்தனை இளசுகள் இதனை விரும்பிச் சாப்பிடுகின்றன என்பதுடன், பெரும்பாலானோர் மதிய உணவாகவே இவற்றைத்தான் உண்கின்றனர் என்பதைப் பார்க்கமுடிகிறது.

வெளிநாட்டு நாகரிகங்களை பின்பற்றும் பணக்கார குடும்பங்கள் மட்டுமல்லாமல், அவர்களைப் பார்த்து தங்களின் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டே இருக்கும் நடுத்தர குடும்பத்தினரும் இத்தகையக் கடைகளை மொய்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உடல் -பருத்த இளசு களும், சிறுவர், சிறுமிகளும் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால்...? என விக்கிரமாதித்தன் கதைகளில் கடைசியில் வருவதைப்போல, உண்மையைச் சொல்லப்போனால் நுற்றுக்கணக்கான ருபாய் செலவு செய்து ஒரு பீட்சாவையோ, பர்கரையோ, பன்னாட்டு குளிர் பானங்களையோ... மணிக்கணக்கில் சாவகாசமாக உட்கார்ந்து தின்று, வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவதைவிட, குறைந்த விலையில் கிடைக்கும் நல்ல காய்கறிகளை வாங்கி, உணவில் சேர்த்து உண்ணப் பழகிக்கொண்டால் மருத்துவச் செலவும் மிச்சம், கடைசிமுச்சுவரை யாருக்கும் தொல்லை தராமல் நிம்மதியாக வாழலாம்.

நன்றி : விகடன்

வியாழன், 22 நவம்பர், 2007

அமெரிக்காவில் அறிமுகமான இ - புக் ரீடர்



அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான்.காம், இ - புக் ரீடரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 400 டாலர் ( சுமார் ரூ.15,600 ) விலையில் விற்கப்படும் இந்த\ இ - புக் மூலமாக, புத்தகங்கள், வார இதழ்கள் மற்றும் பத்திரிக்கைகளை எலக்ட்ரானிக் பேப்பர்களாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


நன்றி : தினமலர்

வெள்ளி, 16 நவம்பர், 2007

சொத்து வாங்கும் முன்...

ஒரிஜினல் டாகுமென்ட், தாய் பத்திரம் எங்கே, யாரிடம் இருக்கிறது என்று கேட்டு வாங்கிப் பார்ப்பது அவசியம்.

கடந்த 30 வருடமாக சொத்து யார் யார் பெயரில் இருந்து வருகிறது என்பதை வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்-டும்.

கிராம நிர்வாக அதிகாரியைச் சந்தித்து மனை மற்றும் சொத்து விஷயத்தில் தாலூகா அலுவலகம் தொடர்புடைய ஆவணங்கள் குறித்து விவரங்களை கேட்க வேண்டும். அவரிடம் ஃபீல்ட் மேப் (Field Map) கேட்டு வாங்க வேண்டும். அதில், குறிப்பிட்ட சர்வே எண்ணுக்குரிய சொத்து எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து சர்வேயர் வைத்து மனை அல்லது வீட்டை அளக்க வேண்டும். ஃபீல்டை அளக்கும்போதே, அதில் பிரச்னை ஏதாவது இருந்தால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், விஷயங்களைக் கக்கிவிடுவார்கள்.

அ&பதிவேடு (A - Register) வாங்கிப் பார்க்க வேண்டும். இதை நிலத்தின் ஜாதகம் என்று சொல்லலாம். அதில், சர்வே எண், உட்பிரிவு செய்யப்பட்ட விவரம், உரிமை-யாளர் பெயர் போன்ற விவரங்கள் இருக்கும். சொத்தை வாங்குபவர், தன் பெயரில் புதிதாக வாங்கினால், அந்த விவரம் அ&பதிவேட்டில் இடம் பெறும்.

நகரம் என்கிறபோது, தாலூகா அலுவலகத்தில் நிரந்தர நிலப் பதிவேடு (Permanent Land Register) இருக்கும். இதில், சர்வே எண், உட்பிரிவு, வீடாக இருந்--தால் கதவு எண், உரிமையாளர் பெயர், சொத்தின் நான்கு எல்லை, சொத்தின் அளவீடுகள் போன்ற விவ-ரங்கள் இருக்கும். பிளான் மற்றும் பில்டிங் அப்ரூ-வல், கடைசியாக சொத்துவரி கட்டியதற்கான ரசீது போன்ற வற்றை வாங்க வேண்டும். இந்த ஆவணங்-களை வக்கீல் ஒருவரிடம் கொடுத்தால், அவர் லீகல் ஒப்பீனி யன் தருவார். அதை வைத்து முடிவு செய்ய-லாம்.

பவர் பத்திரம்!

பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்தை வாங்கும்-போது, கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுப் பார்க்க வேண்டும். 2, 3 வருட பழைய பவர் என்றால், உரிமையாளர் உயிருடன் இருக்கிறாரா என்று விசாரிக்க வேண்டும். அவர் உயிருடன் இருந்தால்தான் பவர் செல்லும்.

ஓனரிடமிருந்து, ‘பவர் இப்போதும் செல்லும்’ என்று வக்கீல் மூலம் பிரமாணப் பத்திரம் (Affidavit) வாங்கிக் கொடுக்கச் சொல்ல வேண்டும். உரிமையாளர் மூலம் சொத்தை வாங்குவது பல வகையில் நல்லது.

பத்திரிகை விளம்பரம்!

ஆவணத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால், உரிமையாளர் அனுமதியுடன் முன்னணி பத்திரிகைகளில், ‘இந்தச் சொத்தை வாங்கப் போகிறேன். இதில் வில்லங்கம், ஆட்சேபணை ஏதாவது இருந்தால் 15 தினங்களுக்குள் தெரிவிக்கவும்’ என்று விளம்பரம் கொடுப்பது நல்லது.

மோசடியாக கிராமமே விற்பனை!

சென்னை புறநகரான தாம்பரம் அருகே கஸ்பாபுரம் என்ற ஊரையே மூன்று பெண்கள், புரமோட்டர் ஒருவருக்கு தங்களின் பூர்வீக ஜமீன் சொத்து என்று சொல்லி விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 80 குடும்பங்கள் வசித்த 282 ஏக்கரை 4 சர்வே எண்களில் விற்றுள்ளனர்.


இதில், 65 ஏக்கரை புரமோட்டர் பிளாட் போட்டு விற்றுவிட்டார். நிலத்தை வாங்கியவர்கள் கிராம மக்களை காலி செய்யச் சொல்ல... அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாவட்ட கலெக்டரிடம் முறையிட, மத்திய குற்றப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்-ளனர்.

அனைத்துக்கும் ஒரே எண்!

உள்ளாட்சி அமைப்பு கொடுக்கும் கதவு எண், வருவாய் துறையின் வழங்கும் பட்டா எண், பத்திரப் பதிவு அலுவலகத்தில் கொடுக்கும் பதிவு எண், நிலத்தின் சர்வே எண் இந்த நான்கும் ஒரே எண்ணாக இருந்தால் ஒரு சொத்து எங்கே இருக்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடிவதோடு, மோசடிகளைத் தடுக்கவும் முடியும் என்பது ஆவண மோசடியால் பாதிக்கப்பட்ட பலருடைய கருத்தாக இருக்கிறது.

நன்றி : நாணயவிகடன்

தொழில் கொள்கை

‘இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்’’ என்ற நிலையை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு தனது தொழில் கொள்கையை வெளியிட்டிருக்கிறது. 2011&ம் ஆண்டுவாக்கில் இருபது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கப்போவதாகக் கூறியுள்ள அந்த அறிக்கை, தமிழ்நாட்டின் ஏற்றுமதியை இரண்டு மடங்காக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. தொழில் துறையினரும் மாநில நிர்வாகமும் கலந்து ஆலோ சித்து அவ்வப்போது கொள்கை முடிவுகளை எடுத்திட ஏதுவாக முதல்வர் தலைமையில் சிறப்புப்பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தொழில் கொள்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள தொழில் கொள்கை, தொழில்துறையின் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்திய தொழில் நிலுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. இதை வரவேற்றிருக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது பற்றிய அணுகுமுறை மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது, விவசாயிகளுக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு முன்வரும் தனியார் நிறுவனத்தினர், நேரடியாக விவசாயிகளிடம் நிலங்களை வாங்கிக் கொள்ளவேண்டும். அவை பெரும்பாலும் தரிசு நிலங்களாகவோ, புன்செய் நிலங்களாகவோ இருப்பது நல்லது. தொழில் பூங்காக்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக வாங்கப்படும் நிலத்தில் பத்து சதவிகிதத்துக்கு மேல் நன்செய் நிலம் இருந்தால், அந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ‘தொழில் கொள்கை’ திட்ட வட்டமாகக் கூறுகிறது.

பத்தாயிரம் ஏக்கர் கொண்ட ‘நிலவங்கி’ ஒன்றை ஏற்படுத்தவும் அந்த நிலங்களில் அடுத்த ஐந்தாண்டுகளில் நல்ல கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய தொழில் பூங்காக் களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘சிப்காட்’ மற்றும் ‘டிட்கோ’ முதலிய அரசு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்படும் தொழில் பூங்காக்களில் பத்து சதவிகித இடம் பள்ளிகள், மருத்துவமனைகள்,


குடியிருப்புகள் முதலான சமூகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு ஊக்கத் தொகைகளும், தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வருவோருக்குச் சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொழில் கொள்கையில் இடம் பெற்றுள்ள இரண்டு அம்சங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதத்தில் முக்கியமான சில சலுகைகளைத் தொழில் கொள்கையில் அறிவித்துள்ளனர். உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆராய்ச்சி மையங்களை உருவாக்கினால், அதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு நுழைவு வரியிலிருந்தும் மதிப்புக் கூட்டு வரியிலிருந்தும் முழுமை யாக விலக்கு அளிக்கப்படும்.

தனி நபர்களோ நிறுவனங்களோ தமது கண்டுபிடிப்புக் காகக் காப்புரிமை (Patent) பெறுவதற்கு ஆகும் செலவில் ஐம்பது சதவிகிதம் அல்லது இரண்டு லட்ச ரூபாய் இதில் எது குறைவோ அதனை அரசே ஏற்கும் என தொழில் கொள்கையில் கூறியுள்ளனர்.

விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள சாதாரண விவசாயிகள்கூட இப்போது பல்வேறு புதிய கண்டுபிடிப்பு களைச் செய்கின்றனர். மகராஷ்டிராவில் அப்படியரு விவசாயி கண்டுபிடித்த ஹெச்.எம்.டி. என்ற நெல் ரகம், இப்போது பல மாநிலங்களில் விளைவிக்கப்படுகிறது. அதற்கான காப்புரிமையை அவர் பெறாத காரணத்தால், அதனால் வரும் லாபத்தை இப்போது மற்றவர்கள் அனுபவிக்கின்றனர். காப்புரிமை பெறுவதற்கான தொகையில் சலுகை வழங்குவது நல்லதுதான். இப்படிப் பட்ட கண்டுபிடிப்புகளில் விவசாயத்துறை சார்ந்த வற்றுக்கும், பெரும்பாலான மக்களுக்குப் பயன்படக் கூடியவற்றுக்கும் காப்புரிமை பெறுவதற்கான செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டால் சிறப்பாக இருக்கும்.

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிப்பதால் ஏற்படும் இழப்பைவிட இதற்குக் கூடுதலாக செலவாகி விடாது. அதுமட்டுமின்றி, இத்தகைய கண்டுபிடிப்புகள் வணிகரீதியில் வெற்றி பெற்றால் அதனால் நமது மாநிலம்தான் லாபம் அடை யும். எனவே, தமிழக முதல்வர் இதனைப் பரிசீலிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளைச் செய்வதற்கு ஊக்குவிக்கப்படும் எனத் தொழில் கொள் கையில் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆர்வமுள்ள மாணவர்களைத் தெரிவு செய்து தேசிய, சர்வதேசிய கருத்தரங்குகளில் பங்கேற்கச் செய்வது, அவர்களது கண்டுபிடிப்புகளுக்கு வர்த்தக ரீதியான வாய்ப்புகளை ஏற்படுத்துவது எனக் குறிப்பான திட்டங்களை அரசு அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

சிமென்ட் தொழிற்சாலைகள் ‘ஃப்ளை ஆஷை’ப் (திறீஹ் கிsலீ) பயன்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தொழில் கொள்கையில் கூறியுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சிமென்ட் விலை ஏற்றத்தால் கட்டுமானத் தொழிலே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஃப்ளை ஆஷைப் பயன்படுத்தும் இந்த யோசனை முக்கியமானதாகும். ஆனால், இதுவும் பொத்தாம் பொதுவில்தான் கூறப்பட்டுள்ளது. அனல்மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரியை எரிப்பதால் கிடைக்கும் ஃப்ளை ஆஷ் பயன்பாட்டை ஊக்குவிக்கப் பல்வேறு நடவடிக்கைகளைப் பல மாநில அரசுகள் எடுத்துள்ளன.

ஒரிசா மாநில அரசு தன் மாநிலத்தில் அனல் மின்நிலையம் உள்ள பகுதிகளில் எழுபது கிலோமீட்டர் சுற்றளவில் செங்கல் சூளைகளைத் தடை செய்துள்ளது. ஃப்ளை ஆஷைப் பயன்படுத்தித்தான் அங்கு கட்டுமானப் பயன்பாட்டுக்கான கற்களை உற்பத்தி செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பொதுப்பணித் துறையால் கட்டப்படும் அனைத்து மேம்பாலங்களுக்கும் ஃப்ளை ஆஷால் தயாரிக்கப்படும் கற்களைத்தான் பயன் படுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஃப்ளை ஆஷை இலவசமாக வழங்குகிறது. ஆனால், அதை வாங்குவதற்குத்தான் ஆளில்லை. மக்களிடம் இன்னும் செங்கல்லால் வீடுகட்ட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருப்பதால் ஃப்ளை ஆஷால் தயாரிக்கப் படும் கற்களை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே, அதை ஊக்குவிக்க, ‘பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கட்டுமான நடவடிக் கைகளிலும் ஃப்ளை ஆஷால் தயாரித்த கற்களையே பயன்படுத்த வேண்டும்’ எனத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் இப்போது எண்ணூர், செய்யூர், கடலூர் எனப் பல்வேறு இடங்களில் புதிய அனல்மின் நிலையங்கள் துவக்கப்பட உள்ளன. அந்தத் திட்டங்களை எதிர்க்கும் அந்தப் பகுதி பொதுமக்கள் ஃப்ளை ஆஷைப் போட்டுவைக்கும் சாம்பல் குழிகளால் தங்களுக்கு சுகாதாரக்கேடு வருமென அஞ்சுகிறார்கள். அவர்களது அச்சத்தைப் போக்கிட ஏதுவாக ஃப்ளை ஆஷை சேமித்து வைக்காமல், அதைக்கொண்டு கற்கள் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு முன்வரும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகள் சிலவற்றை அறிவிப்பதும் பயன்தரும்.

தற்போது இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஐம்பது மில்லியன் டன் ஃப்ளை ஆஷ் உற்பத்தியாகிறது. அதில் ஐந்து சதவிகிதம்கூடப் பயன்படுத்தப்படவில்லை. அரசு கட்டித்தரும் தொகுப்பு வீடுகளுக்கு ஃப்ளை ஆஷ் கற்களைப் பயன்படுத்தினால், கட்டுமான செலவு நிச்சயம் குறையும். இப்போது சரியாக வேகாத செங்கற்களைக் கொண்டு மிகக் குறைவான சிமென்ட்டைப் பயன்படுத்திக் கட்டப்படுவதால் அந்தத் தொகுப்பு வீடுகள் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே சரிந்து விடுகின்றன.

திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி குறித்துத் தொழில் கொள்கையில் நிறையவே கூறியுள்ளனர். இதற்காக மாநில அளவில் ‘மனித வள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்புக் குழு’ அமைக்கப்பட்டு, அதன்மூலம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டு மெனக் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் நான் கோரிக்கை விடுத்தபோது, ‘தொழில் கொள்கையில் அது உள்ளடக்கப்படும்’ என முதல்வர் அறிவித்திருந்தார். அவர் கூறியபடியே அதற்கான திட்டம் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. உயர்நிலைப்பள்ளி மட்டத்திலேயே பாடத்திட்டத்தில் இதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுமென அறிவித்துள்ளனர். இதற்காக சி.ஐ.ஐ&யின் ஒத்துழைப்போடு விரி வான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுத் தமிழக அரசிடம் ஏற்கெனவே வழங்கப் பட்டிருக்கிறது. ஆனால், அதில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து சி.ஐ.ஐ. எதையும் குறிப்பிடவில்லை. தமிழக அரசு செலவு செய்து ஆட்களைப் பயிற்றுவித்துத் தந்தால் அவர்களிலிருந்து தமக்குத் தேவையானவர்களைத் தொழில் நிறுவனங்கள் பொறுக்கி எடுத்துக்கொள்ளும் என்பதாகவே அந்தத் திட்டம் உள்ளது. தொழில் நிறுவனங் களுக்கு எந்தப் பொறுப்பையும் அளிக்காமல் அரசாங்கத்துக்கு மாத்திரம் கடமைகளை வரையறுத்துள்ள அந்தத் திட்டத்தின் அணுகுமுறை சரியான தல்ல. அதை மாற்றி தொழில் நிறுவனங்களும் அரசும்சேர்ந்து அந்தத் திட் டத்தை செயல்படுத்தி னால், நிச்சய மாகப் பெரிய மாற் றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான குறிப்பான திட்டத்தை அரசு தயாரிக்க வேண்டும்.

2011 ஆண்டுக்குள் இருபது லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அரசின் அறிவிப்பு எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமானது எனத் தெரியவில்லை. வேலை வாய்ப் புகளை ‘ஒருங்கு திரட்டப் பட்ட பிரிவு’ (ளிக்ஷீரீணீஸீவீsமீபீ ஷிமீநீtஷீக்ஷீ) ‘ஒருங்கு திரட்டப்படாத பிரிவு’ (ஹிஸீ ளிக்ஷீரீணீஸீவீsமீபீ ஷிமீநீtஷீக்ஷீ) என இரண்டாகப் பிரித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் யாவும் ஒருங்கு திரட்டப்பட்ட பிரிவுக்குள்தான் வரும். தமிழ்நாட்டில் உள்ள முப்பத்தாறு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 2005&2006&ம் ஆண்டில் சுமார் பதினாறாயிரம் பேருக்குத்தான் வேலைவாய்ப்பு தரப்பட்டது. கடந்த ஆட்சியில் இருந்த வேலை நியமனத்தடை ரத்து செய்யப்பட்டு, இப்போது பல்வேறு துறைகளிலும் பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. எனவே, கடந்த ஆண்டில் அதிகபட்சமாக ஐம்பதாயிரம் பேர் வரை வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை ஐம்பது லட்சம் பேர். இதை ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு மிகவும் சொற்பமானதுதான் என்பது புரியும். இந்தச் சூழலில் ஆண்டுக்கு ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை அரசு எப்படி உருவாக்கப்போகிறது என்பது பெரும் கேள்விக்குறிதான்! ஒருங்கு திரட்டப்படாத விவசாயம் உள்ளிட்ட துறைகளையும் உள்ள டக்கித்தான் இந்த வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளதா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. தற்போது அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட அனைத்து வாரியங்களிலும் பதிவு செய்து கொண்டிருப்போரையும் கணக்கிட்டால்கூட இந்த இலக்கை எட்டுவதுகடினம்தான்.

தமிழ்நாட்டில் தற்போது துவக்கப்படுகின்ற பெரிய பெரிய திட்டங்களில்கூட நேரடியாக வேலைவாய்ப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டுவதில்லை. எனவே, அரசின் இந்த அறிவிப்பு வெறும் கவர்ச்சி தானோ என்ற ஐயத்தை சில அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன. இதைத் தெளிவுபடுத்த வேண் டியது அரசின் கடமை.

தொழில் துறையினரின் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் அம்சங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சேர்க்கப்படும் எனவும், உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கவும் மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றவும் முன்வருகின்ற தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதலாக சலுகைகள் அளிக்கப்படும் என்றும் ‘தொழில் கொள்கை’ கூறுகிறது. இவை வரவேற்கக்கூடிய அம்சங்களாகும். ஆனால், இத்தகைய சலுகைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்குப்பின் இப்படி யான, அரசின் சமூக நீதி கொள்கைகளைப் பின்பற்றாத தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட வேண்டும்.

தொழில் தொடங்குவதற்காக முன்வரும் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவற்றுக்கும், அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிப் பதற்குத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இடமில்லையென்ற நிலை உருவாகிவிடும். அந்த நிலைமை வராமல் காக்கவேண்டிய மிகப்பெரும் வரலாற்றுக் கடமை தமிழினத் தலைவரான முதல்வர் கலைஞருக்கு உள்ளது!

நன்றி :ஜு.வி