செவ்வாய், 18 டிசம்பர், 2007

இனிமேல் எனக்குப்  பரிசு  தராதே! - தபூ சங்கர்


'என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்தப் பரிசும் நீ தராதே!' என்றேன்.
கலங்கிப் போனாய். 'எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா?' என்றாய் உடைந்த குரலில்.
'உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.
உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக் கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப் பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ளமுடியும், சொல்.
எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.
'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.
'ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!'

தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை தொகுப்பில் இருந்து.

கருத்துகள் இல்லை: