பெயர்: ஆர்குட்
வயது: மூன்று
என்னைப் பற்றி: கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ‘ஆர்குட் புயுக்கோக்டென்’ ஜஸ்ட் ஜாலியாக என்னைக் கண்டு பிடித்தார்! இன்று எனக்கு உலகம் முழுவதும் 49 மில்லியன் நண்பர்கள்! உலகளவில் அதிகமாகப் பயன்படும் வலைத்தளங்களில் எட்டாவது இடம் எனக்கு. எல்லோரும் என்னில் இலவசமாக உலவலாம்... உங்கள் நண்பர்களைத் தேடிப் பிடிக்கலாம்!
மதம்: எம்மதமும் சம்மதம்!
மொழி: எழுத்து வடிவம் உள்ள எல்லா மொழிகளும்!
இங்கே எதற்காக: நட்பு, அரட்டை, கடலை, காமம், காமெடி, செய்தி, பாராட்டு, திட்டு என எதற்காகவும்...
முதலில் ப்ளஸ்கள்!
எந்தக் கண்டத்தில் இருந்தாலும், ஆர்குட்டில் இருந்தால் ஒற்றைப் பெயரை வைத்துக்கொண்டு விட்டுப்போன நண்பனைத் தேடிப் பிடிக்க முடிவது முக்கியமான ப்ளஸ். நம்மைப் போலவே எண்ணங்கள் கொண்டவர்களுடன் புதிதாக நட்புகொள்ள முடிவது இரண்டாவது நன்மை!
சரி, மைனஸ்கள்..?
நம் ஆர்குட் ஆல்பத்தில் நாம் போட்டு வைத்திருக்கும் புகைப்படங்களை எவர் வேண்டுமானாலும் ‘டவுன்லோட்’ செய்து, அதைக்கொண்டு கிராஃபிக்ஸ் செய்து, சும்மா புகுந்து விளையாடலாம். நமக்கே தெரியாமல் நமது பெயரையும், புகைப்படங்களையும், விவரங்களையும் வைத்துக்கொண்டு அக்கவுன்ட் ஆரம்பித்து, சேட்டை பண்ணலாம். ஏன்... நம் அக்கவுன்ட்டையே ‘ஹேக்’ (கடத்தி!) செய்து, நமது நண்பர்களுக்கு ஆபாசமான, விபரீதமான செய்திகளை அனுப்பலாம். நமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் நட்பின் ஆழத்தையும் மூன்றாவது நபரால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.
இந்த நட்பு வெப்சைட் புண்ணியத்தால் பல முன்னாள் காதல்கள் (திருமணமான பின்னரும்கூட) ஆங்காங்கே மீண்டும் சேர (சோர?) ஆரம்பித்திருக்கின்றன. இரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் தேசப் பாதுகாப்பையும், கலாசாரப் பாதுகாப்பையும் காரணம் காட்டி ஆர்குட்டைத் தடை செய்திருக்கிறார்கள்.
தகவல் கடலாக விரிந்துகிடக்கும் ஆர்குட்டில், ‘ஏன் பூமியின் வெப்ப நிலை உயர்ந்துகொண்டே இருக் கிறது?’ என்று நிபுணர் கருத்துக்களை ஆக்கபூர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதும், ‘பக்கார்டிக்கு எது பங்காளி பெஸ்ட் மிக்ஸிங்?’ என்று குடிமகன் கருத்தை அறிந்துகொள்வதும் அவரவர் இஷ்டம்!
மொத்தத்தில், ஆர்குட் கைப்பிடி இல்லாத கத்தி! பார்த்து, பத்திரமா, பாதுகாப்பா பயன்படுத்திக்கோங்க!- -
நன்றி : ஆனந்தவிகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக