திங்கள், 16 ஜூலை, 2007

கதம்பம் 16 - July - 2007

வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சியாய் இருப்பது. நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ வைப்பது. உலகம் முழுவதையுமே புன்னகைப் பூக்களால் நிரப்புவது."

இன்று படிப்பு ஒரு பதட்டம்.

தேர்வு ஒரு பதட்டம்.

பள்ளிக்குச் செல்லுதல் ஒரு பதட்டம்.

மதிப்பெண்கள் வரும்போது மனம் எல்லாம் நடுக்கம்.

….

எதிலும் பதட்டம் எங்கும் பதட்டம்….

நாம் ஒவ்வொரு நிமிடமும் பதட்டத்துடனே அமர்ந்து இருக்கிறோம். திட்டமிட்டு வாழ்ந்தால் குழப்பமும் இல்லை. நடுக்கமும் இல்லை.

நகைச்சுவை என்பது பதட்டத்தைக் குறைக்கும். அது உற்சாகத்தை அதிகப்படுத்தும். தினமும் சிரிக்கத் தகுந்த செய்திகளை நாம் வாசிக்க வேண்டும். அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு நிமிடம் சிரிப்பது ஒரு மணிநேர உடற்பயிற்சிக்குச் சமம். சிரிப்பது மூளையை இலகுவாக்கும். இதயத்தை வலுவாக்கும். நரம்புகளை முறுக்கேற்றும். காற்று போல் உடலைக் கனமிழக்கச் செய்யும். நுண்ணறிவைச் செம்மையாக்க சிரிப்பது ஓர் உபாயம்.

மகத்தான மனிதர்கள் எல்லோருமே நகைச்சுவை உணர்வுடன் வாழ்ந்தவர்கள் தான்.

ஹென்றி வார்ட் பீச்சர் என்கிற பேச் சாளர் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு துண்டுக் காகிதம் அவரைத் தேடி வந்தது. அதில் ‘முட்டாள்’ என்று எழுதியிருந்தது. உடனே பீச்சர், ‘‘யாரோ தன் பெயரை மட்டும் அனுப்பியிருக்கிறார்கள்’’ என்று அறிவித்தார்.

புத்திக்கூர்மை உள்ளவர்கள் வசவுகளைக்கூட வாழ்த்து களாக மாற்றிக் கொள்வார்கள்.

பெர்னாட்ஷாவும், செஸ்டர் டன்னும் நெருங்கிய நண்பர்கள். செஸ்டர்டன் பருமனானவர். ஷா ஒல்லியானவர். இருவரும் ஒரு முறை தங்கள் தோற்றத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந் தனர். அப்போது செஸ்டர்டன் ‘‘உங்களைப் பார்ப்பவர்கள் நம் நாட்டில் ஏதோ பஞ்சம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள்’’ என்று ஷாவிடம் சொன்னார். அதற்கு, ‘‘உங்களைப் பார்த்ததும் அதற்கு யார் காரணம் என்று கண்டுகொள்வார்கள்’’ என்று மின்னல் வேகத்தில் பதிலடி கொடுத்தார் ஷா.

நகைச்சுவை உணர்வு கசப்பைப் போக்கிக் களைப்பை நீக்கி புத்துணர்வு தரும். இன்று முதல், தினம் ஒரு நகைச்சுவையைப் படித்துப் பகிர்ந்து பலனடைவோம்.

நன்றி : சுட்டி விகடன் , வெ.இறையன்பு I.A.S

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

short n sweet note on sense of humor