செவ்வாய், 4 செப்டம்பர், 2007

கூவாகம்

கூவாகத்தில் ஆண்டுதோறும் நடக்கும் அலிகள் திருவிழாவுக்குச் செல்ல வேண்டும்
என்று பல ஆண்டுகளாக நினைத்து வந்தது இப்போது தான் நிறைவேறியது.
மகாபாரதத்தில் பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றிபெற 32 சாமுத்ரிகா
லட்சணங்களும் பொருந்திய ஒரு ராஜகுமாரனை களப்பலி இட வேண்டும் என்று சாஸ்திர
விற்பன்னர்கள் கூறினர். அதன்படி பார்த்தபோது பாண்டவர் தரப்பில் இரண்டு பேர்
மட்டுமே களப்பலிக்குத் தகுதியானவர்களாக இருந்தனர். ஒருவன் கிருஷ்ணன்.
மற்`றாருவன்,அர்ச்சுனனுக்கும், நாக கன்னிகைக்கும் பிறந்த அரவான். 'என்னையே
களப்பலி கொடுங்கள்' என முன் வந்தான் அரவான்.
களப்பலி கொடுப்பதற்கு முன்பு, 'உனக்கு ஏதேனும் இறுதி ஆசை இருந்தால் சொல்'
என்று அரவானிடம் கேட்கிறான் கிருஷ்ணன்.
அதற்கு அரவான் ஸ்திரீ இன்பம் என்றால் என்னவென்றே தெரியாது எனவும், தான்
பலியாவதற்கு முன்பு ஒரு ஸ்திரீயுடன் போகம் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறான்.
களப்பலியாகப் போகும் அரவானை மணந்து கொள்ள எந்தப் பெண்ணும்
முன்வரவில்லை. அதனால் கிருஷ்ணன் பெண் ரூபம் கொண்டு அரவானை மணம் செய்து
கொள்கிறான். மறுநாள் அரவான் பலியிடப்படுகிறான். பெண் ரூபம் கொண்ட கிருஷ்ணன்
தாலியறுக்கிறான்.
இந்தியா முழுவதும் உள்ள அலிகள் சித்ரா பௌர்ணமியை ஒட்டி கூவாகத்தில்
கூடுகிறார்கள். தங்களை கிருஷ்ணனின் வாரிசாகக் கருதி இங்குள்ள கூத்தாண்டவர்
கோவில் பூசாரியின் கைகளால் தாலி கட்டிக் கொள்கிறார்கள்.
மொத்தம் பதினைந்து நாட்கள் நடக்கும் கூவாகம் திருவிழாவில் தாலி கட்டிக் கொள்ளும்
நிகழ்ச்சியே முக்கியமானது. கொடியேற்றம் நடந்த பதினான்காம் நாள் இரவு இந்நிகழ்ச்சி
நடைபெறுகிறது. அலிகள் புது மணப் பெண்களைப் போல் தங்களை அலங்கரித்துக்
கொள்கிறார்கள். பட்டுப்புடவை, கை நிறைய வளைகள், தலை கொள்ளாத பூ.
பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டவுடன் ஒரே கூத்தும் கும்மாளமுமாக கும்மியடித்து
ஆடிப்பாடுகிறார்கள்.இரவு முழுதும் கொண்டாட்டம் தொடர்கிறது.


விழுப்புரத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்திலுள்ள ஒரு குக்கிராமம் கூவாகம். பத்து
குடிசைகள் கூட இல்லை. அவ்வளவு சிறிய கிராமத்தில் ஒரு லட்சம் பேர்
கூடியிருக்கிறார்கள். அதில் பாதிப்பேர் அலிகள். மற்றவர்கள் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து
வந்த மக்கள்.
வயல் வரப்புகள் எங்கும் அலிகள் கூட்டம் கூட்டமாக ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பல அலிகள் பெண்களை விடவும் அழகாக இருக்கிறார்கள். முந்தின நாள் நடந்த அழகிப்
போட்டியில் முதலிடம் பெற்ற பெங்களூர் ரஞ்சிதாவும், இரண்டாவதாக வந்த ஈரோடு
மதுமிதாவும் உலகின் நம்பர் ஒன் மாடல் நோமி கேம்பெல்லை விடவும் அழகாக
இருந்தனர்.
பலரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். எல்லாமே ஒரு நாவல் அளவு விரியக் கூடிய
கதைகள்.
செக்ஸ் பற்றிய எந்தக் கூச்சமுமின்றிப் பேசினார்கள். மிகவும் நட்பாக இருந்தார்கள். கை
குலுக்கியும் தோள் மீது கை வைத்தும், வெகு நாட்கள் பழகியது போல் பேசினார்கள்.
ஒரு அலி சொன்னார், தனக்கு ஒன்பதாவது வயதில் பெண்ணைப் போன்ற உணர்வுகள்
தோன்றியதாகவும் அதற்கு மேல் பள்ளிக்குச் செல்வது தடை பட்டதாகவும், எல்லா
அலிகளுமே பொதுவாகச் சொன்ன ஒரு விஷயம். சமூகத்தில் தங்களுக்கு எவ்வித
மரியாதையும் இல்லை என்பது, ஈவ் டீசிங் காரணமாக வாரம் ஒரு பெண் தற்கொலை
செய்து கொள்ளும் தமிழ்நாட்டில் அலிகளின் நிலையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை, பேருந்துகளில் செல்ல முடியவில்லை, தனியாக
நடமாட முடிவதில்லை, ரேஷன் கார்டு இல்லை, கிண்டல் செய்பவர்களைப் பற்றி
போலீசிடம் புகார் செய்ய முடிவதில்லை (செய்தால், போலீசாரே சிரிக்கின்றனர்), வேலை
கிடைப்பதில்லை, மூன்று வேளை உணவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால்
வேறு வழியின்றி விபச்சாரத்திற்குத் தள்ளப்படுகிறோம் என்கிறார்கள் பலர்.
ரஞ்சினி என்ற அலி மும்பையில் ஒரு இரவு விடுதியில் நடனமாடுவதாகச் சொன்னார்.
அவருடைய வாழ்க்கை தனிக்கதை.

அலிகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியில் அலிகள் மட்டுமே பங்கேற்பதில்லை.
சுற்றுப்புற கிராமங்களிலுள்ள ஆயிரக்கணக்கான ஆண்களும் நேர்த்திக் கடனுக்காக தாலி
கட்டிக் கொள்கிறார்கள். கைகளில் வளையல் அணிந்து கொள்கிறார்கள். பல இடங்களில்
பெண்கள் தத்தம் கணவன்மார்களுக்கு புடவை கட்டி விடுவதைப் பார்த்தேன். ஒரே ஒரு
நாள் அந்த ஆண்கள் பெண்களாக மாறுகிறார்கள். கூத்தாண்டவர் கோவில் வாசலில்
அரவானின் உருவச்சிலையை அமைக்கும் பணி இரவு முழுவதும் நடைபெறுகிறது.
மரத்தாலான பதினெட்டு அடி சிலை இது. தனித்தனி பாகங்களாகச் செய்யப்பட்டு
இணைக்கப்பட்ட அந்தச் சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்படுகிறது.
காலை ஏழு மணி அளவில் தேர் அழிகளம் நோக்கிப் புறப்படுகிறது. அதுவரை-அதாவது
இரவு முழுதும் தேரின் எதிரே அம்பாரமாய்க் குவிந்து கிடக்கும் கற்பூரத்தை ஏற்றி,
அதைச் சுற்றிலும் கும்மியடித்து ஆடிப்பாடிக் கொண்டிருந்த அலிகள், தேர் புறப்பட்டதும்
ஒப்பாரி வைத்து அழ ஆரம்பிக்கின்றனர். 'போறாரே போறாரே எங்க சாமி அழிகளம்
நோக்கிப் போறாரே' என்று கதறிய படி தேரின் பின்னால் ஓடுகின்றனர்.
கோவிலில் இருந்து அழிகளம் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. வயல் வரப்புகளைத்
தாண்டி குறுக்கு வழியில் அழிகளம் நோக்கிச் செல்கிறேன். அரவான் வந்துசேர
மதியத்திற்கு மேலாகிவிடும் என்கின்றனர்.
அழிகளத்தில் பெரியதொரு ஆலமரம் நிற்கிறது. அதன் கீழே ஒரு பூசாரி.அங்கே வந்து
சேரும் அலிகளின் கை வளையல்களை உடைத்து தாலியை அறுக்கிறார். அறுபட்ட
தாலிகள் ஒரு கொடிமரத்தில் குவிகின்றன. பூக்களையும் மாலைகளையும் அறுத்து
எறிகின்றனர். அலிகள் கூந்தலை விரித்துப் போடுகின்றனர். அவர்களையும் மீறி அழுகை
வெடிக்கிறது. வாழ்வில் ஒரு இரவு மட்டுமே பெண்ணாக வாழ முடிந்த அவர்கள் தங்கள்
கணவனை இழந்து, வாழ்வை இழந்து மீளாத் துயரில் மூழ்குகின்றனர்.
ஒப்பாரிப் பாடல்கள் அந்தப் பிராந்தியமெங்கும் காற்றின் அலைகளில் பரவுகின்றன.
மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு மிக நீண்ட ஒப்பாரிப் பாடல்களைப் பாடியபடி
வட்டமாகச் சுற்றிச் சுற்றி ஓலமிடுகின்றனர்.
நேர்த்திக் கடனுக்காக தாலி கட்டி, புடவை கட்டி, வளையல் போட்ட ஆண்களும்
தாலியறுத்து வளையலை உடைத்துவிட்டு மலங்க மலங்க விழித்தபடி ஒன்றும் புரியாமல்
நிற்கின்றனர்.

நன்றி : எங்கோ படித்தது ......